Tuesday, 5 November 2013

விஸ்வரூபம்–2 படத்துக்கு எதிர்ப்பா?: சினிமா சுதந்திரமாக செயல்பட வேண்டும்- கமலஹாசன் பேட்டி


கமலஹாசனின் 'விஸ்வரூபம்–2' படம் ரிலீசுக்கு தயாராகிறது. இந்த படத்துக்கு எதிர்ப்பு கிளம்பலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அப்படி எதிர்ப்பு வந்தால் நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று ஏற்கனவே அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து கமலஹாசன் அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:–

கேள்வி:– 'விஸ்வரூபம்–2' படத்துக்கு எதிர்ப்பு வந்தால் நாட்டை விட்டு வெளியேறுவேன் என்கிறீர்கள். கன்னட கவிஞர் அனந்தமூர்த்தியும் நரேந்திர மோடி பிரதமரானால் நாட்டை விட்டு வெளியேறுவேன் என்கிறார். கலைஞர்கள் இப்படி முடிவு எடுக்கலாமா?

பதில்:– அனந்த மூர்த்தியை மதிக்கிறேன். அவரது கருத்து அரசியல் சார்ந்தது என் கருத்து தனிப்பட்ட ஒன்று. எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் எனக்கு சிக்கல் வந்தது. அனந்தமூர்த்திக்கான விமர்சகர்கள் அவர் பக்கத்தில் இருந்தே வந்தனர். எனது விமர்சகர்கள் வெளியில் இருந்து வந்தார்கள். அவர்கள் பெரும்பான்மையினரின் பிரதிநிதிகள் அல்ல.

காரணம் பெரும்பான்மை சமுகத்தினர் என் படங்களை பார்க்கிறார்கள். நான் யார் பக்கத்தில் இதற்கு முன் நின்றோனோ அந்த சகோதரர்களிடம் இருந்து எதிர்ப்பு வந்ததுதான் என்னை மிகவும் புண்படுத்தியது. எனக்கு அரசியல் கிடையாது. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது குரல் கொடுத்த ஒரே நடிகர் நான்தான். என் மீது குற்றம் சுமத்துவது அபத்தம்.

கேள்வி:– எதிர்ப்பாளர்களிடம் பேசினீர்களா?

பதில்:– ஆமாம். விஸ்வரூபம் படத்தை காட்டினேன். அவர்கள் பாராட்டினார்கள். கை குலுக்கவும் செய்தனர். மறுநாள் படத்தை தடை செய்ய வேண்டும் என்றார்கள்.

கேள்வி:– 'விஸ்வரூபம்–2' படத்துக்கும் இதே நிலை ஏற்பட்டால் மீண்டும் பழைய மாதிரி முடிவு எடுப்பீர்களா?

பதில்:– நான் ஒரு கலைஞன். எம்.எப். உசைன் என்ன செய்தாரோ அதுபோல் நானும் வெளி மாநிலத்துக்கோ வெளிநாட்டுக்கோ போய் விடுவேன். இது மிரட்டல் அல்ல. எனது ராஜினாமா. தனிப்பட்ட சோகம். இது என் நாடு என்று நினைக்கிறேன். இங்கிருந்து வெளியேறி படங்கள் எடுத்தாலும் அதற்கும் எதிர்ப்பு வரத்தான் செய்யும். கலாசார சென்டிமென்ட் மாறப்போவது இல்லை.

கேள்வி:– சினிமா எத்தகைய பங்காற்ற வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

பதில்:– சினிமா எந்த பணியையும் ஆற்றட்டும். ஆனால் அது சுதந்திரமாக இருக்க வேண்டும். இங்கு சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. ஆனால் சர்வதேச அளவில் ஒப்பிடும்போது நமது சினிமா துறை பின் தங்கி உள்ளது. நமக்குள் ஒற்றுமை வேண்டும்.

கேள்வி:– டி.டி.எச்.சுக்கு எதிர்ப்பு கிளம்பினால் என்ன செய்வீர்கள்?

பதில்:– வீடியோ வந்த போதும் எதிர்ப்பு வந்தது. டி.டி.எச்.சை தொழில்நுட்பமே நிறைவேற்றும். அதற்கான நேரம் வரும்வரை காத்து இருப்பேன்.

கேள்வி:– 2014–ல் அரசியலில் ஈடுபடுவீர்களா?

பதில்:– எனக்கு பார்வையாளர்கள்தான் தேவை. வாக்காளர்கள் அல்ல. நான் எப்போதும் வித்தியாசமான காரியங்களை செய்பவன். அனுபவம் இல்லாத துறையில் நான் ஏன் போக வேண்டும்.

நாம் எல்லோருமே அரசியலில்தான் இருக்கிறோம். ஐந்து வருடத்துக்கு ஒருமுறை ஓட்டு போடுகிறோம். அரசியல்வாதிகளிடம் நல்ல விதமாக நாட்டை நடத்தச் சொல்கிறோம். அரசியல்வாதிகள் தலைவர்கள் அல்ல. மக்களின் பிரதிநிதிகள். மக்கள்தான் தலைவர்கள்.

இவ்வாறு கமலஹாசன் கூறினார்.

0 comments:

Post a Comment