இப்போதைய பவுலர்கள் எந்த ஒரு திட்டமிடுதலும் இல்லாமல் சும்மா வந்து வீசுகிறார்கள் என்று ஆஸ்ட்ரேலிய முன்னாள் வேகப்பந்து மேதையும் தற்போதைய எம்.ஆர்.எஃப். வேகப்பந்து அகாதமியின் இயக்குனருமான கிளென் மெக்ரா மிகச்சரியாக கூறியுள்ளார்.
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
இந்தியாவின் பந்து வீச்சு குறித்து...
நான் அதிக போட்டிகளைப் பார்க்கவில்லை, எனவே கருத்து சொல்வது மிகையாகும். இந்தியாவில் பவுன்ஸ் இருக்காது, ஆனால் அயல்நாடுகளுக்குச் செல்லும்போது அந்தப் பிட்ச்கள் பவுன்ஸ் அளிப்பதைப் பார்த்து வேகப்பந்து வீச்சாளர்கள் கூடுதல் மகிழ்ச்சியடைந்து தேவையில்லாததையெல்லாம் பரிசோதனை செய்வர்.
ஆனால் அயல்நாடுகளில் பவுலர்கள் அதிகம் செய்யவேண்டியதில்லை, வேறு வேறு மாதிரி வீசிக்கொண்டேயிருக்கக்கூடாது.
இந்திய பவுலர்களின் வேகமின்மை காரணமா?
மிட்செல் ஜான்சன், டேல் ஸ்டெய்ன் இருப்பது எந்த ஒரு அணிக்கும் நல்லதுதான், ஆனால் கட்டுப்பாடு லைன் லெந்த் அவசியம் கடைபிடிக்கவேண்டிய ஒன்று. இந்த நாட்களில் நான் பார்க்கும் பவுலர்கள் சும்மா வந்து வீசுகின்றனர். திட்டமிடுதல் இல்லை. பந்து வீசி விட்டு விக்கெட்டுக்காக நம்பிக்கை வைக்கிறார்கள். திட்டமிடுதல் அவசியம்.
ஒருநாள் அணியில் ஜாகீர் கான் இடம்பெறாமை குறித்து...
ஒரு பவுலர் ஃபார்மில் இருக்கிறாரா அவரை உடனே அணியில் எடுத்துக் கொள்ளவேண்டும். இளம் வீச்சாளர்களுக்கு மூத்த வீரர் ஒருவருடன் விளையாடுவது பெரிய அனுபவம், மற்றும் மதிப்பு. ஒரு இளம் வீரருக்கு இதைவிட பெரிய பாடம் எதுவும் இருக்க முடியாது.
ஈஷ்வர் பாண்டே குறித்து...
இந்திய அணியில் அவரை பார்ப்பது பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆனால் அவருக்கு வாய்ப்புக் கொடுக்கப்படாதது வெட்கக்கேடானது.
அவர் சரியாகவே வீசியிருப்பார் என்று நான் கருதுகிறேன். நான் ஈஷ்வர் பாண்டே பந்து வீச்சு மீது நம்பிக்கை வைத்துள்ளேன், விளையாட வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அவர் சிறப்பாக செயல் படுவார் என்று நினைக்கிறேன்.
இவ்வாறு கூறினார் கிளென் மெக்ரா