40முதல் 60 வயது வரையிலான பருவம் மனித வாழ்க்கையில் மிக முக்கியமானது. இந்த காலக் கட்டத்தில்தான் பலவிதமான நோய்கள் மனிதர்களைத் தேடி வரும்.
அதற்கு இடம் கொடுத்து, உடலில் உட்காரவைத்துவிட்டால், ஆரோக்கியத்தை ஒட்டுமொத்தமாக கெடுத்து ஆளையே வீழ்த்திவிடும். நாம் கவனமாக இருந்தால் நோயை அண்டவிடாமல் தடுத்து, முழு ஆரோக்கியத்துடன் வாழலாம்.
என்னென்ன நோய்கள் வரும்?
உடல் எடை அதிகரித்தல்
மன அழுத்தம்
சர்க்கரை நோய்
அதிக அளவில் கொழுப்பு சேருதல்
உயர் ரத்த அழுத்தம்
இதய நோய்
எலும்பு மூட்டு நோய்கள்
புற்று நோய்
வாழ்வியல் முரண்பாடுகளால் ஏற்படும் நோய்கள் :
மெட்டோபாலிக் சின்ட்ரோம் இந்தியர்களுக்கு அதிகமாக உள்ளது. இது அளவிற்கு அதிகமாக இடுப்பு பெருத்துப் போவதையும், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய், ரத்தத்தில் கொழுப்பு (கொலஸ்ட்ரால்) ஆகிய 4 பாதிப்புகளையும் குறிப்பிடுகிறது.
இத்தகைய பாதிப்புகள் இருப்பவர்களிடம் மது மற்றும் புகை பழக்கம் ஏற்பட்டுவிட்டால் அவர்கள் ஆரோக்கியம் அபாயத்தை நோக்கிச் செல்லும்.
தற்போதைய வாழ்க்கை முறை மாற்றங்கள் உணவுப் பழக்கத்தால் ஆண்களின் இடுப்பு அளவு 100 செ.மீட்டருக்கு மேலும், பெண்களின் இடுப்பு அளவு 85 செ.மீட்டருக்கு மேலும் பெருத்து காணப்படுகிறது. மனித உடலில் சேரும் கொழுப்பு களில் இடுப்பில் சேரும் கொழுப்பாலே ஆபத்து அதிகரிக்கிறது.
உடல் எடை அதிகரிப்பது ஏன்?
நாற்பது வயதுக்கு மேல் இளமை விடைபெற்று விடுவதால், இயல்பாகவே உடல் உழைப்பு குறைந்துவிடுகிறது. அதே நேரத்தில் அவர்கள் பார்க்கும் வேலையில் பதவி உயர்வு கிடைக்கிறது. சமூக அந்தஸ்து அதிகரிக்கிறது.
நண்பர்கள் வட்டம் விரிவடைகிறது. அதனால் விருந்து, விழா என்று அவர்கள் உட்கொள்ளும் உணவின் அளவு அதிகரித்து விடுகிறது. மது பழக்கமும் தோன்றுகிறது.
உடல் உழைப்பு குறையும் அதே நேரத்தில், உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவைகளையும் இந்த பருவத்தில் குறைத்து விடுகிறார்கள். பதவி உயர்வால் அதிகமான நேரம் உட்கார்ந்த நிலையிலே வேலை பார்ப்பார்கள். இதுபோன்ற பல காரணங்களால் உடல் குண்டாகிறது.
இந்த பருவத்தில் மனஅழுத்தம் அதிகரிப்பது ஏன்?
ஐம்பது வயதைத் தொடும்போது திருமண மாகி 20 வருடங்கள் கடந்து போயிருக்கும். திருமண வாழ்க்கை போரடிக்க தொடங்கியிருக் கும். இந்த காலக்கட்டத்தில் பிள்ளைகள் வளர்ந்து படிப்பில் முக்கிய கட்டத்தை அடைந்திருப்பார்கள்.
படிப்பில் அவர்கள் அடுத்தடுத்த கட்டத்தை அடைய நிறைய பணம் தேவைப்படும். பெண் பிள்ளைகள் திருமண வயதை அடைந்திருப்பார்கள். அதனால் பணத்தின் தேவையும், மாப் பிள்ளை பார்க்கும் அலைச்சலும் தோன்றும்.
சில வீடுகளில் பிள்ளைகள் திருமணமாகி தனியாக போய்விடுவார்கள். இதனால் கணவனும், மனைவியும் தனிமையை அனுபவிக்கும் நிலை தோன்றும்.
40-60 வயதில் கழுத்து எலும்பு தேய்மானம், டென்ஷன் தலைவலி, வயிற்று எரிச்சல், ஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். தூக்கமின்மை தோன்றும் முடிவு எடுக்கும் திறன் பாதிக்கும்.


0 comments:
Post a Comment