Friday, 20 September 2013

தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியர் கைது; 75 பவுன் தங்க நகைகள் மீட்பு



காஞ்சிபுரத்தில் தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியரைக் கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்து 75 பவுன் தங்க நகைகளை மீட்டனர்.

பெரிய காஞ்சிபுரம் பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் வந்து பெண்களிடம் தங்க நகைகளை பறித்துச் செல்லும் சம்பவம் நாளுக்குநாள் அதிகரித்தது. இது குறித்து சிவகாஞ்சி காவல் நிலையத்தில் மட்டும் 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, இரவு மற்றும் அதிகாலை நேரத்தில்தான் இந்த சங்கிலி பறிப்பு சம்பவம் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் தனிப்படை காவலர்கள் வெள்ளிக்கிழமை காலை 6 மணி அளவில் கச்சபேஸ்வரர் கோயில் அருகே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒரு நபரை காவலர்கள் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். இதைத் தொடர்ந்து அவரிடம் காவலர்கள் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டைச் சேர்ந்த பார்த்திபன் மகன் மதன்மாறன் என்பது தெரியவந்தது.

தொடந்து நடத்திய விசாரணையில் அவர் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த பக்கலபள்ளி அருகே சி.டி.செருவு என்ற கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். 2004 ஆம் ஆண்டு ஆசிரியர் பணியில் சேர்ந்த இவர் மீது ஓசூர், குடியாத்தம் ஆகிய காவல் நிலையங்களில் சங்கிலி பறிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து மதன்மாறன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பணியிடை நீக்க உத்தரவுக்கு தடையாணை பெற்றார் என்பதும் தெரியவந்தது.

மேலும் காஞ்சிபுரத்தில் 18 இடங்களில் பெண்களிடம் தங்கச் சங்கிலிகளை பறித்ததையும் அவர் ஒப்புக் கொண்டார். இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர், அவர் கொடுத்த தகவலின் பேரில் 75 பவுன் தங்க நகைகளை மீட்டனர். மேலும் மதன்மாறனை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட நகைகளை பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், தனிப்படை காவலர்களை பாராட்டினார். அப்போது ஏ.டி.எஸ்.பி. பாஸ்கர், டி.எஸ்.பி. பாலச்சந்தர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

0 comments:

Post a Comment