திருநெல்வேலி நகரப் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி பெண் தமிழரசி அளித்தப் புகாரின் பேரில் திருநெல்வேலி மாவட்ட திமுக செயலர் கருப்பசாமி பாண்டியன் மற்றும் அவரது உதவியாளர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரும் கேரளத்துக்கு தப்பிச் சென்றிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீஸார் கேரளத்துக்கு விரைந்துள்ளனர்.
மொழிப் போர் தியாகி குறளேருழவரின் பேத்தியான நா. தமிழரசி, திமுக-வில் பணியாற்ற விரும்பி திருநெல்வேலி மாவட்ட திமுக செயலரைச் சந்தித்துள்ளார். கடந்த 28.8.2013 ல் தமிழரசியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட கருப்பசாமி பாண்டியன், குற்றாலத்தில் உள்ள தனது பங்களாகவுக்கு வருமாறு அழைத்தாராம்.
இதன்படி அங்கு சென்ற தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்ததாகவும், தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் திருநெல்வேலி டிஐஜி சுமித் சரணிடம் செவ்வாய்க்கிழமை புகார் மனு அளித்தார். இதன்பேரில் விசாரணை நடத்த திருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) துரைக்கு டிஐஜி உத்தரவிட்டார். இதையடுத்து தென்காசி ஏஎஸ்பி அரவிந்த், குற்றாலம் காவல்நிலைய ஆய்வாளர் மன்னவன் ஆகியோர் விசாரணை நடத்தியதில் புகாரில் கூறியவை உண்மை என தெரியவந்தது.
இது தொடர்பாக, குற்றாலம் காவல்நிலையத்தில் கருப்பசாமி பாண்டியன், அவரது உதவியாளர் அல்லல் கார்த்திக் மீது 4 பிரிவுகளில் செவ்வாய்க்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சட்டம், ஆபாசமாக பேசுதல் 294 (பி), பெண்களை இழிவுபடுத்துதல் (354), கொலை மிரட்டல் விடுத்தல் 506 (1) ஆகிய 4 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதில், கொலை மிரட்டல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைச் சட்டப் பிரிவுகள் ஜாமீனில் வர இயலாத வழக்கு என்பதால் இருவரையும் கைது செய்ய போலீஸார் உடனடி நடவடிக்கை எடுத்தனர். ஆனால், முன்னதாகவே கருப்பசாமி பாண்டியன், அல்லல் கார்த்திக் ஆகிய இருவரும் தலைமறைவாகிவிட்டனர். கேரளத்துக்கு தப்பிச் சென்றிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீஸார் கேரளத்துக்கு விரைந்துள்ளனர்.


0 comments:
Post a Comment