முசாஃபர்நகர் கலவரத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வேண்டுமென்றே தாமதப்படுத்துமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரபிரதேச அரசும், ஆளும் சமாஜ்வாதி கட்சித் தலைவர்களும் உத்தரவிட்டதாக ரகசிய வீடியோ ஆதாரம் வெளியாகி உள்ளதால், முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கலவரத்தை ஒடுக்க உடனடி நடவடிக்கை எடுக்காமல் தாமதமாக செயல்படுமாறு அரசும், ஆளும் கட்சி தலைவர்களும் தங்களுக்கு உத்தரவிட்டு இருந்ததாக புத்னா காவல்நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் ஃபுஹுவானா காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஆகிய இருவரும் தெரிவித்த விவரம் வீடியோவில் பதிவாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அகிலேஷ் யாதவ் அரசிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனிடையே கலவரம் பாதித்த முசாஃபர் நகர் மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.
பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இதனிடையே முசாஃபர் நகர் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த தனிக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு கலவரம் தொடர்பாக விசாரணை செய்து அறிக்கை ஒன்றை விரைவில் தாக்கல் செய்ய இருக்கிறது.
இதனிடையே மேற்கூறிய வீடியோ ஆதாரம் தொடர்பாக அகிலேஷ் யாதவ் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவரும், முசாஃபர்நகருக்கான கட்சி பொறுப்பாளருமான ஆசாம் கானிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அதுபோன்று செயல்படும் குணம் தனக்கில்லை என்றும், அத்தகைய குணத்துடன் உயிர் வாழ்வதைவிட சாவதே மேல் என்று கருதுபவன் நான் என்றும் கூறினார்.
தாம் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், அதற்கான தண்டனையை ஏற்க தயாராக உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.


0 comments:
Post a Comment