வேலூர் அருகே ஒன்றிய கவுன்சிலர் ஒருவரை சினிமா பாணியில் ஓட ஓட விரட்டி வெட்டியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் கந்திலியை சேர்ந்தவர் பாபுசங்கர் (வயது 42) ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். இன்று காலை வீட்டில் இருந்து ஜீவா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கந்திலி மெயின் ரோட்டுக்கு வந்தார்.
அங்குள்ள போலீஸ் நிலையம் அருகே கும்பல் ஒன்று மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். அவர்களில் 2 பேர் மிளகாய் பொடியை பாபுசங்கர் முகத்தில் வீசினர். மேலும் 2 பேர் அரிவாளால் அவரது கழுத்து, தலையில் வெட்டினர்.
கண் தெரியாமல் ரத்தம் சிதறியபடி பாபுசங்கர் தப்பி ஓடினார். அவரை கும்பல் விரட்டி சென்று வெட்டினர். அவர்களிடம் இருந்து தப்பி அருகில் இருந்த போலீஸ் நிலையத்துக்குள் பாபுசங்கர் அலறியபடி ஓடினார். சுதாரித்துக் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
வெட்டு காயங்களுடன் ஓடிவந்த கவுன்சிலரை கண்டதும் போலீசார் திடுக்கிட்டனர். அவரை வெட்டிய கும்பலை பிடிக்க முயன்றனர். அதற்குள் கும்பல் தப்பி ஓடி விட்டனர்.
போலீசார் பாபுசங்கரை திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கபட்டார்.
போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கவுன்சிலர் ஓட ஓட விரட்டி வெட்டபட்ட சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தியது.
கொட்டாவூரை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கடந்த ஆண்டு இதே நாளில் கொலை செய்யப்பட்டார். இதில் பாபுசங்கர் சம்பந்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக வெங்கடேசனின் தம்பி மணிகண்டன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாபுசங்கரை நாட்டுதுப்பாக்கியால் சுட்டார். இதில் பாபுசங்கர் உயிர் தப்பினார்.
வெங்கடேசன் கொல்லப்பட்ட நாளான இன்று பாபுசங்கர் மர்ம நபர்களால் வெட்டபட்டுள்ளார். பழிக்கு பழியாக சம்பவம் நடந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


0 comments:
Post a Comment