Wednesday, 18 September 2013

விஜய், சூர்யாவுடன் பணியாற்ற விருப்பம்! அஜித் பட இயக்குனர்!


விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி, ராணா டகுபதி என பல திரையுலகின் முக்கிய நட்சத்திரங்களும் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ஆரம்பம்.

’தல படம் வருமா?’ என்று காத்திருந்த ரசிகர்களுக்கு, ஆரம்பம் தீபாவளியன்று ரிலீஸாகிறது என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.

ஆனாலும் எதற்காக இத்தனை நாட்கள் விஷ்ணுவர்தன் இழுத்தடித்தார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்துகொண்டே வந்தது.

ஆரம்பம் தாமதமானதற்கான காரணத்தை பிரபல பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் விஷ்ணுவர்தன் கூறியிருக்கிறார். பேட்டியில் பேசிய விஷ்ணுவர்தன் “ நான் ஆரம்பம் படத்தை எடுத்து முடிக்க காலத்தாமதமானது என்று யாராவது சொன்னால் நான் நம்பவேமாட்டேன்.

பல்வேறு திரையுலகையும் சேர்ந்த முக்கிய நடிகர்களை வைத்து படமெடுக்கும்போது கால்ஷீட் பிரச்சனை வராமல் படமெடுக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் நான் தமிழ்நாட்டில் படப்பிடிப்பு நடத்தவே இல்லை.

எனவே நீங்கள் தாமதம் என்று சொல்வதை என்னால் ஒப்புக்கொள்ளவே முடியாது.

எனக்கு விஜய், சூர்யா ஆகியோரை வைத்து படம் இயக்க வேண்டும் என்று ஆசைதான். ஆனால் அஜித்திடமும், ஆர்யாவிடமும் எனக்கு ஆழமான நட்பு இருக்கிறது. எனவே அவர்களை வைத்து படம் இயக்கும் போது எனக்கு சுலபமாக இருக்கிறது.

நயன்தாரா பில்லா திரைப்படத்தில் கிளாமராக நடித்திருப்பார். ஆனால் ஆரம்பம் திரைப்படத்தில் நல்ல அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அஜித்தின் ஜோடி என்பதற்கும் மேல் முக்கியமான பொறுப்பு நயன்தாராவிற்கு இருக்கிறது.

அஜித்தின் கதாபாத்திரத்தைப் பற்றி சொன்னால் ஆரம்பம் திரைப்படத்தின் முழுக்கதையும் தெரிந்துவிடும். ஆரம்பம் படத்தின் ஃபைனல் எடிட் பார்த்தேன். நினைத்ததை விட ஸ்டைலாகவும், வேகமாகவும் ஆரம்பம் வந்திருக்கிறது” என்று கூறினார்.

தீபாவளிக்கு ரிலீஸாகும் ஆரம்பம் திரைப்படத்தின் பாடல்கள் நாளை(19.09.13) வெளியாகின்றன. ஆரம்பம் திரைப்படத்துடன் கார்த்தி நடித்துள்ள ஆல் இன் ஆல் அழகுராஜா திரைப்படமும் ரிலீஸாவதால் இரு திரைப்படங்களுக்குமிடையே தியேட்டர்கள் புக் செய்வதில் கடும் போட்டி நிலவி வருகிறது.

0 comments:

Post a Comment