Tuesday, 17 September 2013

சாதிப்பாகுபாடே ஒரு சூழ்ச்சிப்பொறி, அநீதி- பெரியார்


இன்று தந்தை பெரியாரின் 135 ஆவது பிறந்தநாள். அனைத்து தலைவர்களும் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அனிவிக்கிறார்கள், அவரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவுகிறார்கள், ஆனால் அவரின் போதனைகளை மட்டும் கைவிட்டு.

ஈ.வெ. ராமசாமி என்ற இயற்பெயர் கொண்ட இவர், ஈ.வெ.ரா தந்தை பெரியார் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். தந்தை பெரியார் சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாக கருதப்படும் திராவிடர் கழக்கத்தினைத் தோற்றுவித்தவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது.

தந்தை பெரியார் வசதியான, உயர்சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக்கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம விழுமியத்தை கடைப்பிடிக்கும் பார்பனியம், பெண்களைத்தாழ்வாக கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். கடவுள் நம்பிக்கை, சமயம் என்பவை மூடநம்பிக்கைகளை வளர்ப்பதாகக் கருதிய தந்தை பெரியார், தீவிர நாத்திகராக இருந்தார். இவருடைய விழுமியங்களும், கொள்களைகளும், தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும் , அரசியல் பரப்பிலும் ஆழ்ந்த சலனங்களையும், தாக்கங்களையும் ஏற்படுத்தியவை.

தமிழ்நாட்டின்...

...வரலாற்றில் யாருக்கும் கிடைக்காத ஒரு தனி இடத்தைப் பெற்ற பெருமைக்குரியவர் நமது அருமைத் தந்தை பெரியார் அவர்கள்.

துள்ளிக் குதிக்கும் இளமைப் பருவம் முதல் எழுந்து நடக்கவே தள்ளாடும் முதுமை வரை, தாம் கண்டதையும் கேட்டதையும் கருத்தில்கொண்டு, ஆராய்ந்து நோக்கி அவற்றின் நியாய, அநிநாயங்களைப் பகுத்தறிந்து உணர்ந்து, உண்மை கண்டு, அதனை உலகோர்க்கு உணர்த்துவதையே தமது கடமையாகக் கொண்டார்.

அவர் இளமையில் பயின்ற ஏட்டுக் கல்வி குறைவுதான் எனினும், தாமாகப் படிக்கக்கூடிய ஏடுகள் பலவற்றையும் படித்து, அவற்றையும் தமது அறிவுகொண்டு ஆராய்ந்து, அவற்றின் நன்மையும் தீமையும் தெளிந்து மக்களுக்கு விளக்கி உரைத்தார்.

எப்படிப்பட்ட பெருமைக்குரியவர் கூறியதாயினும், எவ்வளவு போற்றப்படும் ஏட்டில் கண்டதாயினும், தமது அறிவுக்குச் சரியென்று தோன்றாத எதனையும் ஏற்க மறுத்தார் என்பது மட்டுமன்றி, எதிர்க்கவும், கண்டிக்கவும் பின்வாங்கவில்லை.

எதுவானாலும் - அது ஏன்? எதற்காக? எப்படி? என்ன பயன்? என்னும் கேள்விகளுக்கு அவற்றை இலக்காக்கினார்.

மனித வாழ்வு, அறிவை அடிப்படையாகக்கொண்டே நாளும் வளர்ச்சி பெறுவது. ஆதி நாள்களில் மனிதன் எத்தனையோ துன்பங்களுக்கிடையில், உயர்க் கேடுகளுக்கிடையில், தனது அறிவைப் பயன்படுத்தி, உயிரைக் காத்துக்கொண்டு முன்னேற்றம் கண்டான். அந்த அறிவு வளர்ந்து, விரிந்து பல துறைகளில் பயின்று, ஆழ்ந்து அணுகி ஆராயும் திறம் பெற்று, மனித வாழ்வை மேலும் மேலும் மேம்பாடு அடையச் செய்து வந்துள்ளது.

மனிதனை...
பெரியாரின் தீண்டாமை ஒழிப்பு

”மனிதனை மனிதன் நெருங்கக் கூடாது, காணக்கூடாது, தீண்டக்கூடாது” - என்கிறார்களே. யார் அவர்கள்? என்றார் பெரியார்.

”மேல்சாதிக்காரர்கள்’ என்ற பதில் வந்தது.

அப்படி மனிதனை மனிதன் இழிவுபடுத்த ஒரு மேல்சாதியா? அந்த மேல்சாதிக்காரன் வளர்க்கும் மாடுகளிலும் கீழோ மனிதன்? நாயினும் இழிந்தவனோ மனிதன்? அந்த மேல்சாதி ஒழிக என்றார். அவர்கள் மற்ற மனிதர்களை இழிவுபடுத்தும் அநீதியைக் கண்டித்தார்.

இது வருணாசிரம தருமம் அல்லவோ? நால்வகைச் சாதி முறையைத்தானே நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம்? அதுவும் தவறா? என்றனர், வருணாசிரம மனப்பான்மையினர்.

அது எப்படி உண்மையாகும்? பிறப்பிலே உயர்வும் தாழ்வும் இயற்கையில் எப்படி இருக்க முடியும்? அது செயற்கைகயாகக் கற்பிக்கப்பட்டதுதானே! சாதிப்பாகுபாடே ஒரு சூழ்ச்சிப்பொறி, முறைகேடு, அநீதி என்றார் பெரியார்.

அதுவே, வேதமும் ஆகமங்களும் கீதையும் உணர்த்திடும் உண்மை, - கண்ணன் படைப்பு நால்வகைச் சாதி என்றனர்.

அந்த வேதமும் கீதையும் அறிவுக்கு ஒத்தனவல்லவே? அவை உரைக்கும் கருத்து ஆரியத்தைக் காக்க வகுக்கப்பட்ட சதித்திட்டம் அதை ஏற்பது மடமை - எதிர்ப்பதே என் கடமை என்றார் பெரியார்.

இதிகாசங்கள் முதற்கொண்டு மனுநீதி சாத்திரம வரையில் வற்புறுத்தும் முறையாயிற்றே வருணாசிரம்ம் என்றனர். அதனால்தானே தமிழர்கள் அடிமைகளாக, தாசர்களாக ஆக்கப்பட்டனர். எனவே, அவற்றை ஒழித்தால்தான், தமிழன் தலைநிமிர முடியும் என்றார் பெரியார்.

இவையெல்லாம் ஏற்பாடு செய்தவன் கடவுளாகமாட்டான். இப்படிப்பட்ட கட்டளை இடுவது தெய்வம் ஆகாது. இதை மீறுவது பாவம் என்றால் நான் அதனை ஏற்கத் தயார்! என்றார் பெரியார்.

இதுதான் நாத்திகம், கடவுளை நம்பாதவர் பேச்சு என்றனர், ஆத்திகர்கள்.

இப்படிப்பட்ட பேதங்களை வளர்க்கும் கடவுளை நம்புவதைவிட, நாத்திகனாக இருப்பதே மேல்; நான் நயவஞ்சக ஆத்திகனாக இருக்க விரும்பவில்லை - என்றார் பெரியார்.

இப்படியெல்லாம் கடவுள் நிந்தனை செய்பவர்களுக்கு இரவுரவாதி நரகந்தான் சம்பவிக்கும் என்றனர் வைதிகர்கள்.

சாதி வேற்றுமையை ஒப்புக்கொண்டு, பிறப்பிலே இழிவை ஏற்றுக்கொண்டு கண்ணுக்குத் தெரிந்த இவ்வுலகில் கருத்தறிந்தும் அநீதியை ஏற்றுக்கொண்டு, தலைமுறை தலைமுறையாக அழிவதைவிடக் கண்ணுக்குத் தெரியாத - யாருங்காட்டாத இரவுரவாதி நரகம் எவ்வளவோ மேல் என்று சுடச்சுடப் பதில் அளித்தார் பெரியார்.

தீண்டாமை...

தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனிதநேயமற்ற செயல் - இந்த வாசகங்கள் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா வாசகர்களே?

இந்த வாசகங்கள் தமிழக அரசின் பள்ளிப் பாடப் புத்தகத்தில் முதல் பக்கத்தில் உள்ளவை. பெரும்பாலும் இவ்வரிகளை படித்திருக்கமாட்டார்கள் என்பது கசப்பான உண்மை.

தமிழகம் மட்டும் அல்ல, சுதந்திர இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் தீண்டாமையால் பலர் தினமும் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இன்றும் பல பகுதிகளில் இரட்டை குவளை முறை நடைமுறையில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஜாதியால் இன்று பல கவுரவக் கொலைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த வருணாசிரம வழக்கத்தால் உலக நாடுகளில் இந்தியா மட்டும் வரலாற்றில் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பது வரலாற்றை தெளிவாக கவணிப்பவர்களுக்கு தெரியும். இதனால்தான் தந்தை பெரியார், மனிதர்களுக்குள்ளும் பிரிவினையை ஏற்படுத்தி வைத்திருக்கும் பார்ப்பனியத்தையும், இந்து மதத்தையும், கடவுளையும் புறந்தள்ளினார். ஜாதிய முறைகளின் ஆணிவேரான இந்து மதத்தை அதனாலேயே தந்தை பெரியார் வெறுத்தார்.

தீண்டாமையை பற்றிய வாசகங்கள் பாடப்புத்தகத்தின் முதல் பக்கத்தில் மட்டும் இல்லாமல், அனைத்து மக்களின் மனதில் பதிந்து, அதன்படி வாழ வேண்டுமானால், தந்தை பெரியாரின் போதனைகளை கடைபிடிக்க வேண்டியது தான் ஒரே வழி.

0 comments:

Post a Comment