Thursday, 19 September 2013

கிரிக்கெட்: தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ் ஏ - இந்தியா ஏ 3வது போட்டியில் தோல்வி!



பெங்களூருவில் நடைபெற்ற இந்தியா ஏ - வெஸ்ட் இண்டீஸ் ஏ மோதிய 3வதும் கடைசியுமான ஒருநாள் போட்டியில் இந்தியா ஏ அணியை வென்று வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி ஒருநாள் தொடரை 2- 1 என்று கைப்பற்றியது.

முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் எட்வர்ட்ஸின் சதத்துடன் 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 312 ரன்கள் விளாசியது. தொடர்ந்து ஆடிய இந்தியா ஏ அணி 50 ஓவர்களில் 267 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி தழுவியது.

முதல் ஒருநாள் போட்டியில் யுவ்ராஜ் சதம் மற்றும் யூசுப் பத்தான் அதிரடியில் வென்ற இந்தியா ஏ அடுத்த 2 போட்டிகளில் தோல்வி தழுவியது.

டாஸ் வென்ற யுவ்ராஜ் சிங் முதலில் மேற்கிந்திய அணியை பேட் செய்ய அழைத்தார். அந்த அணியின் துவக்க வீரர்கள் பிளெட்சர்(28), போவெல் (40) துவக்க விக்கெட்டுக்காக 13.2 ஓவர்களில் 74 ரன்கள் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுக்க, எட்வர்ட்ஸ் 12 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 104 ரன்கள் விளாசினார்.

கார்ட்டர் 35 ரன்களையும், ஜான்சன் 54 ரன்களையும் எடுத்து வலு சேர்த்தனர். கடைசி 8 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் 74 ரன்கள் குவித்தது. உடட்கட் 5 விக்கெட்டுகளை கக்ப்பற்றினாலும் யுவ்ராஜ், யூசுப் பத்தான், அபராஜித், கவுல் ஆகியோர் ரன்களை வாரி வழங்கினர்.

தொடர்ந்து ஆடிய இந்தியா ஏ அணியில் உத்தப்பா 27 ரன்களில் வெளியேறினார். அபராஜித், யுவ்ராஜ் 19 ஓவர்களில் 3வது விக்கெட்டுக்காக 112 ரன்களைச் சேர்த்து நம்பிக்கை அளித்தனர்.

ஆனால் 59 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்களை விளாசிய கேப்டன் யுவ்ராஜ் நர்ஸ் வீசிய அபாரமான தூஸ்ராவுக்கு ஸ்டம்ப்களை இழந்தார். அபராஜித் 78 ரன்களில் ஆட்டமிழக்க 33வது ஓவரில் 181/4 என்று தடுமாறியது.

யூசுப் பத்தன் மட்டுமே அதிரடி வீரராக மீதமிருந்தார். ஆனால் அவர் தடவு தடவென்று தடவி 18 ரன்களில் அசிங்கமாக அவுட் ஆகி வெளியேறினார்.

கடைசியில் வினய் குமார் 37 ரன்கள் எடுத்து பொழுதுபோக்கைக் கூட்டினார். ஆனால் வெற்றி கைகூடவில்லை.

தொடரை இழந்தது இந்தியா ஏ.

0 comments:

Post a Comment