Thursday, 19 September 2013

ராணுவத்தை புனிதப்படுத்துதல்



கேள்விக்குள்ளாகாத எதுவும் புனிதமாகிவிடும், புனிதமானதாக கருதும் எதுவும் கேள்விக்குள்ளாகாது என்பதை ஆன்மீகவாதிகளைவிட அதிகம் தெரிந்து வைத்திருப்பவர்கள் அரசியல்வாதிகள். அவர்களால் புனிதப்படுத்தப்பட்ட ஒன்று இந்திய ராணுவம்.

தேசபக்தியின் பௌதிக வடிவமாகதான் இந்தியாவில் ராணுவம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதனை கேள்விக் கேட்கிற எவரும் அடுத்தகணம் தேசவிரோதியாக முத்திரைக் குத்தப்படுவர். ஜெயமோகன் போன்றவர்கள் அப்படி கேள்வி கேட்பவர்களுக்கு கூலி அறிவுஜீவிகள் என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்திய ஒருமைப்பாடை குலைப்பதற்காக வெளிநாடுகளிலிருந்து பணம் பெறும் கருங்காலிகள் இவர்கள் என்பது ஜெயமோகனின் கூற்று.

இந்தியாவின் எல்லை மற்றும் உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்வதில் ராணுவத்தின் பங்கு முக்கியமானது. அதில் மாற்று கருத்தில்லை. அதேநேரம் இந்தியாவின் பிற அரசு நிறுவனங்களைப் போல இதுவும் ஒரு நிறுவன கட்டுமானம் என்பதை நாம் மறந்துவிடுகிறோம். அல்லது மறக்கடிக்கப்பட்டிருக்கிறோம். ராணுவம் தேசபக்தியின் பௌதீக அடையாளமாக்கப்பட்டதன் விளைவாக, போரில் இறக்கும் வீரர்களுக்கு வீர அஞ்சலி செலுத்துவதுடன் நமது கடமை முடிந்துவிடுகிறது. அரசியல்வாதிகள் இந்த எல்லைக்கப்பால் யாரையும் அனுமதிப்பதில்லை. ராணுவத்தை தேசபக்தியுடன் இணைப்பதன் வழியாக அதனை காலங்காலமாக அவர்கள் சாதித்தும் வந்திருகிறhர்கள்.

ராணுவத்தை கொண்டாடாத அரசியல்வாதி இந்தியாவில் இல்லை. ராணுவ வீரனாக இருப்பதே மகத்தானது என்று அவர்கள் நம்மை போதிக்கிறார்கள். அப்படி போதிப்பவர்களின் குடும்ப உறுப்பினர்கள் யாரும் ராணுவத்தில் இல்லை என்பது நிதர்சனமான உண்மை. இந்தியாவில் எம்பி கள், எம்எல்ஏ க்கள், மந்திரிகள், முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், பிரதமர் என்று மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில். இவர்களில் எத்தனை பேர் ராணுவப் பணியில் தங்கள் குடும்பத்தினரை ஈடுபடுத்தியிருக்கிறார்கள்? எத்தனை பேரின் பிள்ளைகள் கார்கில் போன்ற போர்களில் உயிரிழந்திருக்கிறhர்கள்? யாருமில்லை என்பதுதான் இதற்கான பதிலாக இருக்கும். அதேநேரம் அமெரிக்காவில், சினிமாவில், அரசியலில் இவர்களின் வாரிசுகள் எத்தனை பேர் ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்று பார்த்தால் நமது மக்கள் பிரதிநிகள் கிட்டத்தட்ட அனைவருமே வளையத்துக்குள் வந்துவிடுவார்கள்.

இந்த இடத்தில் மனம் திறந்து சில உண்மைகளை நாம் ஒப்புக் கொண்டாக வேண்டும். எல்லாத் துறைகளிலும் அர்ப்பணிப்புணர்வுடைய பலர் இருப்பது போலவே, ராணுவத்தை தனது லட்சியமாகக் கொண்டு அதில் பணியாற்றுகிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் வேலைக்கான உத்தரவாதத்துக்காக மட்டுமே ராணுவத்தில் சேர்கிறார்கள். வேலைக்கான இன்னொரு வாய்ப்பு இல்லாமல் ராணுவத்தை தேர்வு செய்கிறவர்களே அதிகம். அதற்காக அவர்களுக்கு தேசபக்தி இல்லை என்று அர்த்தமில்லை. உயிருக்கு உத்தரவாதமில்லை என்பது தெரிந்தே அவர்கள் ராணுவத்தை நாடுகிறார்கள்.
இந்த நடைமுறை யதார்த்தத்தை மறைத்து ராணுவத்துக்கு புனிதச் சாயம் ஏற்றுவதில் எந்த லாபமும் இல்லை. ராணுவத்தில் நடக்கும் அரசியல்வாதிகளின், அதிகாரிகளின் ஊழல்களை மறைப்பதற்கே அது உதவும்.

13-08-13 அன்று மும்பை கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிந்துரக்ஷக் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்து சிதறி கடலில் மூழ்கியது. 18 இந்திய வீரர்கள் பலியானார்கள். ஏன் நீர்மூழ்கி கப்பல் வெடித்தது, என்ன காரணம் என்று இதுவரை பதிலில்லை. வழக்கம்போல மரணமடைந்தவர்களுக்கு வீர அஞ்சலி செலுத்தியதோடு சிந்துரக்ஷக் இந்திய மனங்களிலிருந்து மறைந்துவிட்டது.

1997 ல் 400 கோடி தந்து ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட அந்தக் கப்பல் 2012 ல் பராமரிப்புக்காக ரஷ்யா அனுப்பப்பட்டது. வாங்கிய செலவு 400 கோடி என்றால் அதனை சரிசெய்ய செலவு 450 கோடிகள். 2013 ஏப்ரலில் மீண்டும் இந்தியா கொண்டு வரப்பட்டு மும்பையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போதுதான் கப்பல் வெடித்தது. 18 இந்திய வீரர்கள் பலி. ஆனால் கப்பலுடன் வந்த ரஷ்ய வீரர்கள் ஹhயாக ஹேhட்டலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். 450 கோடிகள் பராமாpப்பு செலவு பிடிக்கும் ஒரு கப்பலை 400 கோடிகள் கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் என்ன? யாருடைய நலனுக்காக வாங்கப்பட்டது?

இந்த கேள்விகள் உண்மைக்கான திசையில் ஒரு அடிகூட முன்னகரவில்லை. இது மட்டுமல்ல. கார்கில் போரில் நூற்றுக்கணக்கான வீரர்கள் பலியானதற்கு தவறான வழிகாட்டலும் ஒரு காரணம் என்ற சர்ச்சை, மும்பை தாக்குதலில் காவல்துறை அதிகாரியின் மரணத்துக்கு தரமற்ற புல்லட்புரூஃப் உடை காரணம் என்ற புகார் என எதுவுமே அடுத்தகட்டத்தை நோக்கி நகரவில்லை.

ராணுவத்தை தேசபக்தியின் வடிவமாகவும், கேள்விக்கப்பாற்பட்ட புனிதமாகவும் கட்டமைத்ததுதான் இதற்கு காரணம்.

அரசியல் கட்சிகளுக்கு தங்களின் விருப்பத்தை செயல்படுத்த கேள்விக்கு அப்பாற்பட்ட அதிகார மையங்கள் தேவை. மத்திய அளவில் ராணுவம் என்றால் மாநில அளவில் காவல்துறை. இவற்றின் தவறான நடைமுறைகளை கேள்விக்குட்படுத்தும் போதெல்லாம் தேசத்தின் ஒற்றுமையை குலைக்கும் சதி, தேசத்தை பலவீனமாக்கும் வெளிநாட்டு கூலி அறிவுஜீவிகளின் முயற்சி என்று ஒரே வரியில் கடந்து போகிறார்கள். பொதுமக்களாகிய நாமும் தேசபக்தியின் பெயரால் இந்த கேள்விகளை கண்ணை மூடி கடந்து விடுகிறோம். இந்த மௌனத்தின் விளைச்சல்கள்தான் போபர்ஸ் முதல் சவப்பெட்டிவரையிலான ஊழல்களும், சிந்துரக்ஷக் கப்பல் வெடித்து சிதறியதும். இந்த தவறுகளின் முதல் பலனை அனுபவிப்பவர்கள் ராணுவ வீரர்களாகவே எப்போதும் இருக்கிறார்கள். அவர்களுக்கான நீதியை பெற்றுத் தராமல் வீர அஞ்சலி செலுத்தி தேசபக்தி கோஷம் போடுவது அவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய அநீதி. நமது இந்த அறியாமையை பயன்படுத்திதான் மத்திய அரசு ராணுவத்தையும் ஊழல் மலிந்ததாக மாற்றியிருக்கிறது.

தவறுகளை மூடி மறைப்பதன் வழியாக எந்தவொரு நிறுவனமும் வலுப்பட்டதாக சரித்திரம் இல்லை. தவறுகளை திறந்த மனதுடன் விவாதித்து அதனை களைந்து முன்னோக்கி நகர்வதே ஆரோக்கியமான பாதை. ஆனால் தேசபக்தியின் பெயரால் அரசியல்வாதிகளும், அடிப்படைவாத அறிவுஜீவிகளும் தவறுகளை மூடி மறைப்பதை ராஜதந்திரம் என்று கருதுகிறார்கள். இந்த நோய்க்கூறு எவ்வளவு வலிமை பொருந்திய அமைப்பையும் பலவீனப்படுத்திவிடும்.
பா.ஜ.க. யின் பிரதம வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டிருக்கும் மோடி, வேட்பாளர் அறிவிப்புக்கு பின் பேசிய ராணுவம் குறித்த புகழுரைகளை இந்த தரவுகளின், புரிதலின் அடிப்படையில்தான் பார்க்க வேண்டும். மத்தியில் ராணுவம் என்றால் மாநிலத்தில் காவல்துறை. 2002 குஜராத் இனப்படுகொலைக்குப் பிறகு அம்மாநில காவல்துறை நடத்திய போலி என்கவுண்டர்கள் காரணமாக 32 போலீஸ் அதிகாரிகள் சிறையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதில் பலரும் ஐபிஎஸ் அதிகாரிகள்.

இனப்படுகொலைக்குப் பின் மோடி மீதான விமர்சனங்கள் கூர்மையடைந்த காலகட்டத்தில் இந்த போலி என்கவுண்டர்கள் நடத்தப்பட்டன. 2004 ல் 19 வயது இளம் பெண் இஷ்ரத் ஜஹன் உள்பட நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். 2006 ல் சொராபுதீன் ஷேக் என்கவுண்டரில் கொல்லப்பட்டார். இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போது மோடி, அத்வானி மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்களை கொலை செய்யும் திட்டத்துடன் வந்தவர்கள் என்றும், லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்புடையவர்கள் எனவும் மோடி அரசு கூறியது. அவர்களை சுட்டுக் கொன்றதை சாதனையாக பேசினார் மோடி. 2006 நவம்பாpல் நடந்த செராபுதீன் ஷேக் என்கவுண்டருக்கு போலீஸுக்கு உதவியாக இருந்தவன் துளசிராம் பிரஜhபதி. அவனும் 2006 டிசம்பரில் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.

மோடியையும் பா.ஜக, ஆர்எஸ்எஸ் தலைவர்களையும் கொலை செய்ய முயன்றவர்கள், பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த என்கவுண்டர்கள் மூன்றுமே போலியானவை என்பது நிரூபணமாகியிருக்கிறது. சிறையில் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரியும், முன்னாள் டிஐஜி யுமான வன்சாரா அரசின் வழிகாட்டுதலில்தான் அனைத்தையும் செய்தோம். மோடி எனக்கு கடவுள், அவர் எங்களை கைவிட்டுவிட்டார் என்று கடிதம் எழுதியிருக்கிறார். இவர் ஆன்டி டெரரிஸ்ட் ஸ்குவாடின் தலைவராக இருந்து செராபுதீன் ஷேக்கின் என்கவுண்டரை நடத்தியவர்.

அன்று இந்த படுகொலைகளை தனது சாதனையாக பேசிய மோடி அவை போலியானவை என்று நிரூபணமான பிறகு அதுபற்றி வாயே திறக்கவில்லை. தனது பக்தனை (வன்சாரா) காப்பாற்ற முனைந்தால் தாம் மாட்டிக் கொள்வோம் என்பதால் கள்ள மௌனத்தை வன்சாரா விஷயத்தில் கடைபிடிக்கிறார். இனப்படுகொலையால் உருவான விமர்சனத்தையும், தனது அரசு மீதான களங்கத்தையும் திசை திருப்ப மோடி நடத்திய நாடகம் இந்த போலி என்கவுண்டர்கள் என்ற விமர்சனத்தை எளிதில் புறந்தள்ளிவிட முடியாது. குஜராத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்களை சுட்டுக் கொன்றதான தோற்றத்தை ஏற்படுத்தி, முஸ்லீகளை படுகொலை செய்ததற்கு நியாயம் கற்பிக்க முயன்றார் மோடி. மேலும், அரசின் வழிகாட்டுதல் இன்றி எந்தவொரு என்கவுண்டரும் சாத்தியமில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த எளிய உண்மை.
இந்த என்கவுண்டர்கள் போலியானவை என்ற உண்மை வெளிவந்ததில் மோடி அரசுக்கு எந்த பங்கும் இல்லை. செராபுதீன் ஷேக்கின் என்கவுண்டருடன் அவரது மனைவியும் மாயமானார். அவர் என்ன ஆனார் என்பது தெரியாத நிலையில் என்கவுண்டரில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் குடிபோதையில் அவரை ரகசியமான இடத்தில் கொலை செய்ததை உளற, அதைக் கேட்டுக் கொண்டிருந்த பத்திரிகையாளர் மூலமாக உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின்படி 2007 முதல் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள். அவர்களுக்கு வழிகாட்டிய, அவர்களை செயல்பட வைத்த அதிகார மையங்கள் இந்தியாவை காப்பாற்றப் போவதாக அறைகூவல்விடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ராணுவத்தை புனிதப்படுத்தியதன் வழியாக அதனை ஊழல் மலிந்ததாக மாற்றியது மத்திய காங்கிரஸ் அரசு. அதன் விளைவுதான் போபர்ஸ் போன்ற ஊழல்களும், கப்பல் வெடித்து சிதறியதும். காவல்துறையை மோடி அரசு கையாண்டவிதத்தின் விளைவுகள்தான் குஜராத்தில் வெளிச்சத்துக்கு வந்திருக்கும் போலி என்கவுண்டர்கள்.

ராணுவமும், காவல்துறையும் மிகப்பெரிய அமைப்புகள். சோனியா தலைமையிலான காங்கிரசானாலும், மோடியை முன்னிறுத்தும் பாஜக வானாலும் அவற்றை மாற்றியமைக்கப் போவதில்லை. அரசியல் கட்சிகள் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட இந்த அமைப்புகளையே பயன்படுத்துகின்றன. அரசியல் கட்சிகளால் கட்டுப்படுத்தப்படுபவை என்றவகையில் இந்த அமைப்புகளும் அரசியல் சார்புடையவையே. இவற்றுக்கு தேசபக்தியின் புனிதச் சாயம் ஏற்றுவதன் வழியாக தங்களின் சுயநல நடவடிக்கைகளை - ஊழலானாலும், இனப்படுகொலையானாலும், போலி என்கவுண்டர்களானாலும் - மூடி மறைக்க அரசியல் கட்சிகள் முயல்கின்றன.

முகம் தெரியாத வழிபோக்கன் விபத்தில் சிக்கினால்கூட அதன் பின்னணி விசாரிக்கப்படுகிறது. கப்பல் வெடித்து 18 வீரர்கள் பலியானதற்கு எந்த விசாரணையும் இல்லை, பதிலும் இல்லை. 18 வீரர்களின் உயிர்கள் எந்த மதிப்புமில்லாமல் கடலில் கரைந்துவிட்டது. அவர்களை தியாகியாக்கி, சில லட்சங்கள் நஷ்டஈடாக அவர்களின் குடும்பங்களுக்கு தருவதன் வழியாக தனது தவறுகளை அரசும் அரசியல்வாதிகளும் மூடி மறைக்கப் பார்க்கிறhர்கள். இந்த அநீதிக்கு பொதுமக்களாகிய நாமும் தேபக்தியின் பெயரால் எப்போதும் துணை நின்று வருகிறோம்.

தேசத்தின் கௌரவத்தை முன்னிறுத்தி உணர்ச்சிகரமான அஞ்சலியுடன் அனைத்தையும் மறந்துவிடுவது ஒருவகையில் கௌரவக் கொலைகளைப் போன்றதுதான். காரணங்களை அறிய முற்படுவதே உண்மையான தேசபக்தி. அந்த உண்மைகளை சோனியா தலைமையிலான காங்கிரஸிடமோ, மோடியை முன்னிறுத்தும் பாஜக விடமோ எதிர்பார்த்தால் ஏமாந்து போவோம். அது கட்சிகளிடம் அல்ல, நம் ஒவ்வொருவாpன் விழிப்புணர்வில் இருக்கிறது.

0 comments:

Post a Comment