சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கடந்த செவ்வாய்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸ் எஸ்.ஐ மற்றும் போலீசார் மீது வெடிகுண்டை வீசியும் ஆயுதங்களைக் காட்டி மிரட்டியும் தப்பிச் சென்ற பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய மூவரை போலீசார் விரட்டிச் சென்று கைது செய்து அவர்களிடமிருந்து வெடிக்காத நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்கள், மோட்டார் பைக் ஆகியவற்றை கைப்பற்றினர்.
மானாமதுரை சிப்காட் போலீஸ் சரகம் வேலூர் விலக்கு அருகே சிப்காட் காவல்நிலைய எஸ்.ஐ தவமுனி போலீஸார் செந்தில், ராஜா ஆகியோர் இரவு நேரத்தில் வாகனச் சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் மூன்று பேர் வந்துள்ளனர் போலீசார் இவர்களை மறித்து நிறுத்தியுள்ளனர். பைக்கிலிருந்து இறங்கிய அந்த மூவரும் தாங்கள் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை எடுத்து போலீஸார் மீது வீசினர். ஆனால் அது வெடிக்காமல் உருண்டு ஓடியது. அதன்பின் அவர்கள் பைக்கில் வைத்திருந்த அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை எடுத்து போலீஸாரிடம் காட்டி பக்கத்தில் வந்தால் வெட்டிவிடுவோம் என மிரட்டி தாங்கள் வந்த பைக்கில் ஏறி சிவகங்கையை நோக்கி தப்பிச் சென்றனர்.
அதன்பின் எஸ்.ஐ தவமுனி மானாமதுரை இன்ஸ்பெக்டர் பால்பாண்டிக்கு இது குறித்து தகவல் தெரிவித்தவுடன் அவர் போலீஸாருடன் அங்கு வந்து சேர்ந்தார். அதன்பின் இன்ஸ்பெக்டர் பால்பாண்டி, எஸ்.ஐ க்கள் தவமுனி, பூமிநாதன் மற்றும் போலீஸார் பைக்கில் தப்பிச் சென்ற அந்த மூவரையும் ஜீப், பைக்குகளில் விரட்டிச் சென்றனர்.
மானாமதுரை அருகே பெரியகோட்டை உப்பாற்றுப் பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்த அவர்களை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். பின்னர் விசாரித்தபோது அவர்கள் மானாமதுரை அருகே வேலூர் கிராமத்தைச் சேர்ந்த லெட்சுமணன் மகன் காளீஸ்வரன்(24), கருப்புச்சாமி மகன் வினோத் கண்ணன்(25) செட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்த சோணைமுத்து மகன் ஆனந்த்பாபு(26) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவர்கள் தப்பி வந்த பைக் அவர்கள் வைத்திருந்த கத்தி, அரிவாள்கள், ஒரு நாட்டு வெடிகுண்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேற்கண்ட மூவரும் மானாமதுரை அருகே துத்திக்குளம் விலக்கு பகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு உதயக்குமார் என்பவரையும் கடந்த 2012 ஆம் ஆண்டு சிவகங்கை அருகே முத்துப்பட்டி என்ற இடத்தில் இரு சகோதரர்களையும் வெட்டி கொலை செய்த வழக்குகளில் தொடர்புடைய முக்கிய எதிரிகள் ஆவர். இந்த வழக்குகளில் இவர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.
இவர்களில் வினோத் கண்ணன் மானாமதுரை கன்னார்தெரு பகுதியில் வசித்து வரும் தனது பெற்றோருடன் தங்கியுள்ளார். மற்ற இருவரும் அவ்வப்போது தங்களது கிராமத்துக்கு வந்துபோய் உள்ளனர். மானாமதுரை சிப்காட் எஸ்.ஐ தவமுனி கொடுத்த புகாரின்போரில் இன்ஸ்பெக்டர் பால்பாண்டி, நகர் காவல் நிலைய எஸ்.ஐ பூமிநாதன் ஆகியோர் காளீஸ்வரன், வினோத் கண்ணன், ஆனந்த்பாபு ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிந்து அவர்களை கைது செய்து ரிமாண்டுக்கு அனுப்பி வைத்தனர்.


0 comments:
Post a Comment