நாம் அனைவரும் ஏதாவது ஒரு விஷயத்திலிருந்து வெளியேறுவதற்கு முயன்று கொண்டேயிருக்கிறோம். சிலருக்கு அது சொந்த குடும்பமாக இருக்கலாம், சிலருக்கு சொந்த ஊராக இருக்கலாம், வேறு சிலருக்கு மீள முடியாத பழக்கமாகவோ, உறவாகவோ இருக்கலாம். இவர்கள் அனைவருக்கும் சென்றடையக் கூடிய கனவு நிலம் என்று ஒன்று இருக்கும். வெளியேறத் துடிப்பது விசையேற்றப்பட்ட நாண் என்றால், இலக்கு அந்த கனவு நிலம்.
அப்படி பூடானின் மலைகள் சூழந்த இயற்கை எழில் நிரம்பிய கிராமத்திலிருந்து அமெரிக்க கனவுடன் கிராமத்திலிருந்து வெளியேறும் இளைஞனைப் பற்றியது 2003ல் வெளியான ட்ராவலர்ஸ் அண்ட் மெஜிஷியன்ஸ் திரைப்படம். அழகிய மலைக்கிராமத்தில் அரசு ஊழியனாக இருப்பவன் டென்டப். நகரத்திலிருந்து வந்த இளைஞன். அவனது உள்ளம் முழுக்க அமெரிக்காவே நிரம்பியிருக்கிறது. பூடானில் அவனுக்கு கிடைக்கும் மாதச் சம்பளத்தை அமெரிக்காவில் அரை நாளில் அவனால் சம்பாதிக்க முடியும். அமெரிக்காவின் துள்ளல் இசை, கவர்ச்சிகரமான பெண்களுக்கு முன்னால் பூடான் கிராமம் வறிய பிச்சைக்காரனைப் போல அவனுக்கு தெரிகிறது.
ஒருநாள் அவன் எதிர்பார்த்த அமெரிக்க நண்பனின் கடிதம் வருகிறது. விசா தயாராக உள்ளது. அவன் கிளம்ப வேண்டியதுதான் பாக்கி. திருவிழாவுக்கு செல்வதாக பொய் சொல்லி என்றென்றைக்குமாக அந்த கிராமத்தைவிட்டு அவன் கிளம்புகிறான்.
துரதிர்ஷ்டவசமாக அன்றைய பேருந்தை அவன் தவறவிடும்படி ஆகிறது. அங்கு சில நாட்களுக்கு ஒருமுறைதான் பேருந்து வரும். அதிர்ஷ்டமிருந்தால் திம்பு செல்லும் ஏதாவது வண்டியில் தொற்றிக் கொள்ளலாம். ஒரு வயதான ஆப்பிள் விற்கும் கிழவர், இளம் புத்த துறவி ஆகியோருடன் அவன் பயணம் தொடர்கிறது. வழியில் ரைஸ் பேப்பர் தயாரிக்கும் கிழவரும், அவரது இளம் மகளும் சேர்ந்து கொள்கிறார்கள்.
லாரியிலும், கால்நடையாகவும் செல்லும் அந்தப் பயணத்தின் நடுவில் இளம் புத்த துறவி கதை சொல்ல ஆரம்பிக்கிறார். நமது டென்டப்பைப் போல் கனவு நிலத்தைப் பற்றிய கற்பனையில் இருக்கும் தஷி என்ற இளைஞனின் கதை.
இந்தப் படத்தின் முக்கியமான அம்சம், கதைக்குள் கதை சொல்லும் பாணி. பூடானின் மரபான கதை சொல்லல் முறையில் இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. நம்மூர் பஞ்ச தந்திரக்கதைகளைப் போல என்று ஓரளவுக்கு சொல்லலாம். படத்தில் வரும் கதாபாத்திரம் ஒரு கதையை சொல்லும் போது, அது கதை என்பது பார்வையாளர்களுக்கு தெரிந்துவிடுவதால் அந்தக் கதையில் முழுதாக அவர்களை கவனப்படுத்துவது கடினம். வெறும் கதைதானே என பார்வையாளன் எளிதாக அதிலிருந்து வெளியேறிவிடுவான். தத்துவார்த்தமாகவும், கனவு சார்ந்தும் அந்தப் பகுதியை கையாண்ட விதத்தில், அந்த அபாயத்தை இயக்குனர் Khyentse Norbu அனாயாசமாக கடந்து விடுகிறார்.
தஷி இளம் பெண்களை பற்றி சதா கனவில் இருப்பவன். ஒருமுறை அவனது குதிரை கட்டுப்பாடில்லாமல் ஓடி அவனை அடர்ந்த வனத்துக்குள் கொண்டு சேர்க்கிறது. மழை பெய்யும் அந்த இரவில் அவன் ஒரு குடிசையை கண்டடைந்து உதவி கேட்கிறான். அங்கு ஒரு வயதான விறகு வெட்டியும், அவரின் அழகான இளம் மனைவியும் மட்டுமே இருக்கிறார்கள்.
மறுநாள் அங்கிருந்து கிளம்பும் தஷி வழி தெரியாமல் மீண்டும் கிழவர் இருக்கும் இடத்திற்கே வருகிறான். கிழவரின் இளம் மனைவி டெஹி அவனை சில நாட்கள் தங்கி இருக்குமாறும், அவள் தறியில் நெய்துவரும் துணி தயாரானதும்; அதனை விற்க கிழவர் கிராமத்துக்கு செல்வார், அப்போது அவனும் உடன் செல்லலாம் எனவும் அறிவுறுத்துகிறாள். ஆனால் துணி நெய்யும் வேலை நாள் கணக்கில் நீள்கிறது. துணிக்கு தேவையான நூல் இதுவரையில்லாத அளவுக்கு சிக்குண்டு கிடக்கிறது. கிழவரால் அதனை சரி செய்யவே முடிவதில்லை.
அதற்குள் டெஹியின் பேரழகில் தஷி சிக்குண்டு போகிறான். அவன் கனவு கண்ட இளம் பெண் அவள். ஒருநாள் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறுகிறாள் டெஹி. அதனை கலைக்க அவளுக்கு விருப்பமில்லை. அது அவர்களின் குழந்தை. கிழவருக்கு தெரிந்தால் அவரின் கூரிய கத்தி இருவரின் உயிரையும் பலி வாங்கிவிடும். ஒரே வழி கிழவரை கொல்வதுதான். டெஹியின் கடுமையான முடிவை தஷியால் மீற முடிவதில்லை.
தனது அரைகுறை வைத்திய அறிவை வைத்து அவன் தயாரிக்கும் மூலிகை விஷம் கிழவரை கொல்ல போதுமானதாக இல்லை. அவர் இரவு முழுவதும் வலியில் அரற்றிக் கொண்டேயிருக்கிறார். அழகான அவனது கனவுப் பெண் டெஹி இப்போது அவனால் ஜீரணிக்க முடியாதவளாக மாறிவிட்டாள். அதிகாலையில் உயிருக்குப் போராடும் கிழவரையும், கர்ப்பமான டெஹியையும் விட்டு அவன் ஓடத் தொடங்குகிறான். பின்னால் டெஹியின் அபயக்குரல் அவனை துரத்துகிறது. ஆற்றைக் கடப்பவன் அந்த குரலின் சோகத்தை தாங்க முடியாமல் டெஹியை தேட ஆரம்பிக்கிறான். ஆனால் அவனால் ஆற்றில் அடித்துச் செல்லப்படும் அவளின் ஆடையையே பார்க்க முடிகிறது.
புத்த துறவியின் கதை முடியும் போது டென்டப்பின் மனமும் பயண நிகழ்வுகளினூடே ரொம்பவும் மாறிப் போயிருக்கிறது. ரைஸ் பேப்பர் தயாரிப்பவரின் மகள் சோனத்தின்பால் பலமான நட்பை உணர்கிறான். சோனம் அவனை விரும்புவதாக துறவி அவனை சதா கிண்டல் செய்து கொண்டேயிருக்கிறார். பயணத்தின் ஆரம்பத்தில் சிடுசிடுவென்று அனைவரிடமிருந்தும் தள்ளி இருக்கும் டென்டப் துறவியின் கிண்டலை சிரித்துக் கொண்டே ஏற்றுக் கொள்கிறான். கடைசியில் அவர்கள் பிரிய வேண்டி வருகிறது. துறவி அவனிடம் இன்னொரு கதையை சொல்கிறேன் என்று அவனுடைய கதையையே சொல்ல ஆரம்பிக்கிறார். அவனும் சிரித்துக் கொண்டே, அமெரிக்கா செல்லாமல் கதை நாயகன் கிராமத்துக்கே திரும்புவதாக கதையை முடிக்கிறான்.
மனுஷ்யபுத்திரனின் கவிதையொன்று, பூக்கள் உதிர்ந்து கிடக்கும் சாலை வழியாக உன்னை பார்க்க வந்தேன் என காதலன் காதலியிடம் சொல்வதாக ஆரம்பிக்கும். போகப் போக கவிதை, அன்பின் மிருக விழிகளோடு பழி தீர்க்க வந்தேன் என்பதாக மாறும். முதலில் ஸ்தூலமான பாதையைச் சொல்லும் கவிதை அரூபமான காதலனின் உணர்வை சொல்வதாக பரிமாணம் கொள்ளும். இந்தப் படத்தில் வரும் டென்டப்பின் கதை ஸ்தூலமான அவனின் அமெரிக்க கனவு நிலத்துக்கு செல்வதைப் பற்றியது. கதைக்குள் வரும் தஷியின் அனுபவம் அரூபமான தத்துவத்தால் பின்னப்பட்டது.
நாம் ஏற்கனவே சொன்னது போல் நாம் அனைவருமே எதிலிருந்தாவது வெளியேற முயன்று கொண்டேயிருக்கிறோம். நிலமாக இருந்தாலும், உறவாக இருந்தாலும், எதிலிருந்து வெளியேற வேண்டும் என்று விரும்புகிறோமோ அதற்கும், எதை சென்றடைய விரும்புகிறோமோ அதற்கும் பெரிய வித்தியாசமிருப்பதில்லை. ஒருவனின் மகிழ்ச்சியும், துக்கமும் அவனிடத்தில் இருக்கிறதே தவிர வெளியில் இல்லை என்ற புரிதலின் அடிப்படையில் பார்த்தால் கனவு நிலம் என்பதே காற்றை பிடிக்க முயலும் வெற்று துரத்தல் மட்டுமே.
தனது முதல் படம் த கப் (The Cup - 1993)க்குப் பிறகு 2003 இல் இந்தப் படத்தை Khyentse Norbu இயக்கினார். அடிப்படையில் அவர் ஒரு புத்த துறவி. இந்தப் படத்தில் வரும் தஷியின் கதையை பூடானின் புத்த கதையிலிருந்தே அவர் உருவாக்கினார். டென்டப்பின் கதை பிரபல எழுத்தாளர் யசுனாரி கவப்பட்டோவின் த டேன்சிங் கேர்ள் ஆஃப் இஸு வின் பாதிப்பில் உருவானது. Khyentse Norbu அமெரிக்காவில் அரசியல் மற்றும் திரைப்படக்கலையை கற்று படமெடுக்க வந்தவர்.
இந்தக் கதை பூடானின் மரபான கதை சொல்லல் முறையில் அமைக்கப்பட்டது. டென்டப்பின் கதை, அதற்குள் வரும் தஷியின் கதை. உண்மையில் தஷிக்கு நடுக்காட்டில் டெஹியுடன் ஏற்படும் அனுபவங்கள் அனைத்தும் அவனின் கற்பனை. அவனது தம்பி சில போதையேற்றும் மூலிகைகளை வைனில் போட்டு தருகிறான். அதனைக் குடிக்கும் தஷிக்கு ஏற்படும் கற்பனைதான் டெஹியின் கதை. இந்த கதைக்குள் கதைக்குள் கதை மிகச்சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது. பூடானின் பழக்க வழக்கங்கள், அதன் இயற்கை வனப்பு கதையினூடாக நமக்கு அனுபவமாகிறது.
தத்துவார்த்தமான கதை என்பதால் வசனங்கள் இயல்பாகவே தத்துவத்தின் சாயலை பெறுகின்றன. மரம் வெட்டியான கிழவர் தஷியிடம், நாம் ஆண்கள், நமக்கு வயதானாலும் நமது பொறாமை இளமையாகவே இருக்கும் என்கிறார். டென்டப் தனது ட்ரிம் லேண்ட் அமெரிக்காவுக்கு செல்வதை துறவி அனைவரிடமும் கிண்டல் தொனியில் கூறிக் கொண்டேயிருக்கிறார். அதனை கேட்கும் அவர்களுடன் பயணிக்கும் குடிகாரன், நான் இப்போதே அங்குதான் இருக்கிறேன் என்று பதிலளிப்பான்.
படத்தில் மிகக் குறைந்த அளவே இசை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. படத்தில் நடித்திருப்பவர்கள் அனைவரும் சினிமாவுக்கு புதியவர்கள். அவர்களின் முதலும் கடைசியுமான படம் இதுதான்.
டெஹியை கனவு நிலமாகவும், அதனை சென்றடையும் வேட்கையை காமமாகவும் இப்படம் சித்தரிக்கிறது. தஷி தனது கனவு நிலத்தை கண்டடைகிறான். ஆனால் அவன் கற்பனை செய்தபடி அதில் முழுமையை காண முடிவதில்லை. குற்றவுணர்வு கிழவரின் வடிவில் அவனை துரத்திக் கொண்டேயிருக்கிறது. குற்றவுணர்வை சாகடிப்பது என்பது நமது மனசாட்சியை கொலை செய்வதைப் போன்றது. ஒருபோதும் நம்மால் அது முடிவதில்லை. குற்றுயிராக முனகும் கிழவரைப் போல அது நம் ஆன்மாவை அமைதியிழக்க செய்கிறது.


0 comments:
Post a Comment