பிரான்சில் பனிச்சறுக்கில் ஈடுபட்டப்போது விபத்தில் சிக்கி படுகாயமடைந்து கோமா நிலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் எப். 1 சாம்பியன் மைக்கேல் ஷூமேக்கர் சிகிச்சையின்போது கண்களை திறந்து மூடியதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, பனிச்சறுக்கின்போது விபத்தில் சிக்கி படுகாயமடைந்து கோமா நிலையில் பிரெஞ்சு மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெரும் மைக்கேல் ஷூமேக்கருக்கு நினைவு மெல்ல மெல்ல திரும்பத் தொடங்கியுள்ளதாகவும், அவர் கண்ணைத் திறந்து மூடுவதாகவும், மருத்துவர்களின் சிகிச்சைக்கு நல்ல விதத்தில் ஒத்துழைப்பு தருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பனிச்சறுக்கில் ஈடுபட்டபோது தவறி விழுந்த ஷூமேக்கரின் தலை பாறையில் மோதி அடிபட்டு பெரும் ரத்தக்கசிவு ஏற்பட்டது. இதனால் அவர் கோமாவில் வீழ்ந்தார்.
அவரது உயிரைக் காப்பாற்ற தீவிர சிகிச்சையை மருத்துவர்கள் தொடங்கினர். இதன் காரணமாக தற்போது அவரது உடல் நிலையில் சின்ன அளவில் முன்னேற்றம் தெரியத் தொடங்கியுள்ளது.
எனினும், ஷூமேக்கர் எப்போது முழுமையாக கோமாவிலிருந்து மீள்வார் என்பதற்கு உத்தரவாதம் தர முடியாது எனவும், அதற்கு நீண்ட நாட்கள் ஆகலாமெனவும் நரம்பியல் மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக பிரெஞ்சுப் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


0 comments:
Post a Comment