இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமணின் வங்கி கணக்கில் இருந்து ரூ.10 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைனில் பொருட்கள் வாங்கியதாக அவரது கணக்கில் இருந்து ரூ.10 லட்சம் பணம் எடுக்கப்பட்டு இருந்தது. தனது கணக்கில் இருந்த ரூ.10 லட்சம் மோசடி செய்யப்பட்டதால் லட்சுமண் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் ஐதராபாத் போலீசில் புகார் செய்தார்.
இந்த நிலையில் லட்சுமண் வங்கி கணக்கில் இருந்து ரூ.10 லட்சத்தை எடுத்து மோசடி செய்தவர் கொல்கத்தா வாலிபர் என்று தெரிந்தது. அவரது பெயர் இஷாகல் ஷேக் (வயது32).
அவருக்கு கொல்கத்தா சால்ட்லேக் பகுதியில் உள்ள வங்கியில் கணக்கு இருந்தது. நீண்ட காலமாக அந்த வங்கி கணக்கை ஷேக் பராமரிக்கவில்லை. கடந்த புதன்கிழமை அவர் தனது வங்கி கணக்கில் ரூ.10 லட்சம் பணத்தை டெபாசிட் செய்தார்.
இதில் சந்தேகம் அடைந்த வங்கி மேலாளர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது தான் அந்த பணம் லட்சுமண் வங்கி கணக்கில் இருந்து மோசடி செய்யப்பட்ட பணம் என்பது விசாரணையில் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.


0 comments:
Post a Comment